மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

28.5.14

Short story: சிறுகதை: சம அறிவுத் திட்டம்

 

Short story: சிறுகதை: சம அறிவுத் திட்டம்

2108ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை! அதை மனதில் வைத்துக் கொண்டு மேலே படிக்கவும்.

கதிரவன் வரலாமா வேண்டாமா என்ற பலத்த சிந்தனையுடன், மேக மூட்டங்களுக்கு நடுவே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த அதிகாலை நேரம்.

சென்னையின் 2253 0440 வது தெரு.

அது என்ன தெரு என்று தெரிந்து கொள்ள உங்கள் பாக்கெட் கணினி அல்லது உங்கள் வீட்டுப் படுக்கை அறையில் சுவற்றில் பதிக்கப் பெற்றுள்ள பத்துக்குப் பத்தடி தொடுதிரை டிஜிடல் ஸ்கிரீனைத் தொட்டுப் பார்க்க வேண்டாம்.

நானே சொல்லி விடுகிறேன். முதல் நான்கு எண்கள் சென்னையின் பகுதிகளையும், அடுத்த நான்கு எண்கள் சாலையின் பெயரையும் குறிக்குமல்லவா? அது அம்பத்தூர் முருகப்ப ரெட்டி தெரு.

முதுகு வின்னெண்று வலிக்க சரவணன் எழுந்து உட்கார்ந்தான். 120 நிமிடத் தூக்கம் மிச்சம் இருப்பது கண்களில் தெரிந்தது. அதோடு திரும்பிப் பார்த்தான்.

அவன் மனைவி ஸ்டெல்லா நின்று கொண்டிருந்தாள்.

“என்னடி செல்லம்?”

“டாக்டரிடம் போய் வரவேண்டாமா? எட்டு மணிக்கு முதல் அப்பாய்ன்ட்மெண்ட். அது உங்களுடையது. விட்டால், இன்றும் மூன்று மாதங்களுக்கு அவரைப் பார்க்க முடியாது!”

“பொசகெட்ட டாக்டர்! எவனாவது ஞாயிற்றுக் கிழமை - அதுவும் காலை எட்டு மணிக்கு, கன்சல்ட்டிங் ரூமைத் திறுந்து வச்சிகிட்டு உக்கார்ந்திருப்பானா சொல்லு!”

“உளராதீர்கள். உங்களுக்கு என்ன தெரியும்? ஹி ஈஸ் சச் எ டெடிக்கேட்டட் பெர்சன். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு அவரிடம் நேரம் வாங்கியிருக்கிறேன் தெரியுமா? ராத்திரி எத்தனை மாத்திரைகள் போட்டீர்கள்”

இனிமேலும் உட்கார்ந்திருந்தால் தனது குடிப்பழக்கத்திற்குக் கேடு வந்துவிடும் என்பதை உணர்ந்த சரவணன் விருட்டென்று எழுந்தவன் அடுத்து இருந்த கழிவு,குளியல், மேக்கப் மூன்றையும் ஒருமிக்க செய்துகொள்ளும் ரிஃப்ரெஷ் அறைக்குள் நுழைந்து எஸ்கேப் ஆனான்.

மனைவி மாத்திரைகள் என்று கேட்டது விஸ்கி மாத்திரகளை. அறுபது எம்.ஜி என்பது ஒரு லார்ஜ் அளவு. முப்பது எம்.ஜி என்பது ஒரு ஸ்மால். மற்றதை நீங்களே கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள்.

அவற்றை எப்படிச் சாப்பிடுவதா?குடிப்பழக்கம் இல்லாதவரா?

ஒரு டம்ப்ளர் தண்ணீரில் போட்டால் கண் இமைக்கும் நேரத்தில் கிடைக்கும் கலவையைச் சிப்பி சிப்பி மெதுவாகக் குடித்து உரம் ஏற்றிக் கொள்ளலாம் அல்லது வாய்க்குள் போட்டு ஒரு டம்ப்ளர் தண்ணீரோடு விழுங்கியும் விடலாம்.

நான்கு லார்ஜ்களுக்கான மாத்திரைகள் உத்தமம். ஜிவ்'வென்று இருக்கும். ஆறு சாப்பிட்டால் எதிரில் இருப்பவன் இரண்டாகத் தெரிவான். அதற்கு மேல் ஒரு மாத்திரை சாப்பிட்டாலும் வாந்தி இன்னபிற இத்தியாதிகள்.ஹேங்கோவர் தீர பன்னிரெண்டுமணி நேரம் ஆகும். எத்தனை டம்ப்ளர் மோர் மாத்திரைகள் சாப்பிட்டாலும் பலன் இருக்காது.

பால்,தயிர், எல்லாம் மாத்திரைகள்தானென்று உங்களுக்குத் தெரியாதா?

நானோ டெக் படுத்தும்பாடு!
-------------------------------------------------------------------------------------------------------
திரைப்பட நடிகர் ஜி.பி ஹாசனைப் போன்ற தோற்றத்துடன் டாக்டர் டக்கராக இருந்தார்.

ஜி.பி ஹாசனின் முழுப்பெயர் கோவிந்தராஜப் பெருமாள் ஹாசன்.

சரவணன் அமர்ந்தவுடன், மெல்லிய குரலில் கேட்டார்:

”சொல்லுங்கள் என்ன வேண்டும் உங்களுக்கு?”

“என் பையனுக்கு, மண்டையில் 'மாக்ரோ சிப்' பொருத்த வேண்டும்!”

“வயது என்ன?”

‘இந்த ஆகஸ்ட்டுடன் பத்து வயது முடிகிறது.”

“நோ ப்ராப்ளம் பொருத்தி விடலாம். பன்னிரெண்டு வயதிற்கு மேலென்றால்தான் முடியாது”

“எத்தனை நாட்கள் ஆகும் டாக்டர்”

“பத்தே நாட்களில் முடிந்து விடும். ஆனால் நாங்கள் கண்காணிப்பில் வைத்திருந்து அவனைத் திருப்பியனுப்ப மேலும் இருபது நாட்களாகும். மொத்தத்தில் ஒரு மாதம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்”

“எவ்வளவு செலவாகும் டாக்டர்?”

“டோட்டல் பாக்கேஜ் உள்ளது. இருபத்தைந்து கோடி செலவாகும். பெற்றோர்கள் உடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை! எல்லாவற்றையும் எங்களுடைய அசோசியேட்ஸ் கம்பெனி பார்த்துக்கொள்ளும். அலையன்ஸ் கம்பெனிபற்றி உங்களுக்குத் தெரியும் அல்லவா? அவர்கள் தான் எங்களுடைய அசோசியேட்ஸ்”

“எனக்குத் தாங்காது சார். எனக்கும் என் மனைவிக்கும் சேர்த்து மாதம் இருபத்தைந்து லட்ச ரூபாய்தான் சம்பளம் வருகிறது. லோ பட்ஜெட்டில் வேறு ஏதாவது ஸ்கீம் உள்ளதா?”

"இப்போதைக்கு இல்லை! எதிர்காலத்தில் வரலாம்.எங்களிடம் பதினைந்து துறைகளுக்கான பாடங்கள் உள்ளன! பொறியியல் மருத்துவம், நிர்வாகம் என்று எந்தத் துறையை வேண்டுமென்றாலும் நீங்கள் தெரிவு செய்யலாம். பொறியியல் என்றால் அதன் 27 உட்பிரிவுகளுக்கும் சேர்த்து ஒரே பாடம்தான். அதேபோல மருத்துவம் என்றால் அதன் 30 உட்பிரிவுகளுக்கும் சேர்த்து ஒரே பாடம்தான்." டாக்டர் சொல்லிக் கொண்டே போனார்.

சரவணனுக்குக் கேட்கக் கேட்கப் பிரம்மிப்பாக இருந்தது. பையனைப் பள்ளிக்கூடம், கல்லூரி முதுநிலைக் கல்லூரி என்று படிக்க வைத்தால், ஐந்து கோடிகள் வரை செலவாகும்.12 வருடங்கள் பாடு பட வேண்டும். படித்துத் தேறுவான் என்பதற்கு உறுதி இல்லை. ஆனால் இந்த மாக்ரோ சிப் டெக்கில் ஒரே மாதத்தில் பையன் தலை சிறந்த மருத்துவர் ஆகிவிடுவான். இந்த நினைப்பில் ஒரு பொறி தட்ட, சரவணன் திடீரென்று கேட்டான்.

"சிப் பொறுத்திய நிலையில், அது எத்தனை நாட்களில் வேலை செய்யும்? பையன் எப்போதிருந்து வேலைக்குப் போகலாம்?"

"நீங்கள் குறிப்பிடும் பாடத்தை சிப்பில் முழுமையாக ஏற்றி, ஒரு சிறு சர்ஜரி மூலம் மண்டைக்குள் வைத்துவிடுவோம். அது பையனின் மூளையுடன் இணந்து யதார்த்தமாகச் செயல்பட இரண்டு மாதங்கள் ஆகும். அதோடு மூன்று மொழிகளுக்கான மென்பொருட்கள், கலைக்களஞ்சியம், செஸ் உட்பட பலவிதமான விளையாட்டுக்களுக்கான மென் பொருட்களையும் உள்ளே ஏற்றி விடுவோம். அதெல்லாம் இலவசம். பையன் மூன்று மொழிகள் பேசுவதோடு, அறிவு ஜீவியாகவும் இருப்பான். ஜாதிப் பிரச்சினனகளை ஒழித்து விட்டோம். ஆனால் இப்போதைய பிரச்சினை சமஅறிவு இல்லாமை! அதை ஒழிக்க விஞ்ஞானி கோவி.மன்னன் கண்டுபிடித்ததுதான். இந்த மாக்ரோ சிப். இதுவரை மூன்று லட்சம் குழந்தைகளுக்குப் பொருத்தியிருக்கிறோம். இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் பள்ளிக்கூடம், கல்லூரிகளே இல்லாமல் செய்து விடலாம்."

"சரி டாக்டர், அந்தத்துறையில் இருப்பவர்களுக்கெல்லாம் வேலை இல்லாமல் போய் விடுமே?"

"நோ, அது நம்முடைய வேலை அல்ல! அதை அரசு பார்த்துக் கொள்ளும். இப்போது விவசாயத்துக்கு ஆள் இல்லை. அந்தத்துறைக்கு யார் வேண்டுமென்றாலும் செல்லலாம். யூசர் ப்ரெண்ட்லி டெக்னாலஜியெல்லாம் வந்து விட்டது. ஒரு சிறு தொட்டியை வைத்து இரண்டே மாதங்களில் ஒரு மூட்டை நெல்லை உற்பத்தி செய்யலாம். அதைக் கொண்டு போய் மிஷினில் கொட்டினால் அவித்துப் பிழிந்து மாத்திரைகளாக்கிக் கொடுக்க
ஏராளமான மிஷின்கள் வந்துவிட்டன. வீட்டில் இருந்தபடியே விவசாயம் செய்யலாம்"

"அது கிடக்கட்டும் டாக்டர்! நீங்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.பையன் எப்போது வேலைக்குப் போகலாம்? வேலை கிடைக்குமா?

"பதினெட்டு வயது வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் வேலைக்குச் செல்வதை அரசு சட்டங்கள் அனுமதிக்காது!"

"அதுவரை அவன் என்ன செய்வான் டாக்டர்?"

"அவன் ஆன் லைனில் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இணையம் எண் எட்டில் எராளமான பயிற்சித் தளங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. கோடிக்கணக்கான சிகிச்சைக் கிளிப்பிங்குகள் காணக் கிடைக்கின்றன. தினமும் ஒரு ஆறு மணி நேரம் அதைப் பார்த்து அவன் தன் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். பயிற்சி வகுப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

"சரி டாக்டர், பணத்திற்கு என்ன செய்வது டாக்டர்? எங்கள் இருவர் கம்பெனியிலும் சேர்த்து அதிக பட்சம் பத்துக் கோடிக்கு மேல் கடன் வாங்க முடியாது டாக்டர்!"

"அதெல்லாம் கவலைப் படாதீர்கள், எங்கள் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பு நிதி நிறுவனம் உங்களுக்கு வட்டியில்லாக் கடனுக்கு ஏற்பாடு செய்யும். அதற்கான பேப்பர்களை மட்டும் நீங்கள் கொடுத்தால் போதும்!"

"என் மனைவியைக் கலந்தாலோசித்துவிட்டு மீண்டும் வருகிறேன். நன்றி டாக்டர்!"

என்று சொன்ன சரவணன் எழுந்துவிட்டான்

++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரவணனின் மனைவி ஸ்டெல்லாவின் ஏற்பாட்டில் எல்லாம் கச்சிதமாக நடந்தது.

தம்பதிகளுக்குப் பரம சந்தோஷம்.

மருத்துவமனையில் இருந்து தங்கள் மகன் திரும்பிய நாளன்று, தங்கள் குடியிருப்பில் இருப்பவர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் ஒரு சிறு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.குடிக்கான மாத்திரைகள்தான் அதிகம் செலவாகியது. பஃபே உணவிற்காக கண்டாமினேஷன் ஃப்ரீ பேக்கிலிருந்து உடைத்து வைக்கப்பட்டிருந்த விதம் விதமான உணவு மாத்திரைகள் மிஞ்சி விட்டன. ஆறு மணி நேரத்திற்குப் பிறகு அவற்றை உபயோகிக்க முடியாது. அத்தனையும் வீட்டிலிருந்த சிறு க்ரஷ்சர் மூலம் உடைக்கப்பட்டு குப்பைக்குப் போயின!

அவர்களுடைய குமாரன் ஜூனியர் சரவணன் முன்னைவிட சுறுசுறுப்பாக இருந்தான்.

மண்டையில் மட்டும் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சோடா மூடி அளவிற்குத் தழும்பு இருந்தது. அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள் மூன்று மாதங்களுக்குள் முடி முளைத்து அந்தத் தழும்பு மறைந்து விடுமாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++

மூன்று மாதங்கள் ஓடிப்போனதே தெரியவில்லை!

தம்பதிகள் இருவரில் ஒருவருக்கு வெளி வேலை. ஒருவர் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைக் கணினியில் செய்ய வேண்டும்.

அலுவலகத்தில் இருந்து திரும்பிய சரவணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவன் மனைவி ஸ்டெல்லா கலவரத்துடன் இருந்தாள். தலையில் அடிபட்டிருந்த இடத்தில் போடப்பட்டிருந்த ப்ளஸ் 2xy பிளாஸ்த்ரி அவளுடைய கலவரத்தை அதிகப் படுத்திக் காட்டியது!

சரவணன் தன்னுடைய பதட்டத்தைக் காட்டிக்கொள்ளாமல், மெதுவாகக் கேட்டான்,

"என்னடி செல்லம்? என்ன நடந்தது? ஒய் யூ ஆர் பானிக் ?"

"எனக்குப் பயமாக இருக்கிறது டியர்?"

"ஏன் என்ன நடந்தது?"

"நமது பையன் வயலண்ட்டாகி விட்டான். பேச்சு வார்த்தையில் தகறாறு முற்றி, ஒரு கட்டையை எடுத்து என்னை அடித்து விட்டான்."

"அய்யோ, அப்புறம் என்ன ஆயிற்று?"

"நான் போட்ட சத்தத்தில், கட்டடத்தில் குடியிருப்பவர்கள் எல்லாம் கூடிவிட்டார்கள். எல்லோருமாக ஒன்று சேர்ந்து அவனைக் கட்டுப் படுத்த வேண்டியதாகி விட்டது."

"இப்போது அவன் எங்கே?"

"செடேட்டிவ் கொடுத்து அவனைத் தூங்க வைத்திருக்கிறோம்"

"பிரச்சினை என்ன? என்ன தகறாறு?"

"எனக்கு செக்ஸ் வேண்டும். ஒரு பெண் வேண்டும். பணம் கொடு. அல்லது பெண்ணை ஏற்பாடு செய்து கொடு என்கிறான்"

"அய்யோ அந்த அளவிற்கு எப்படிப் போனான்?"

"பத்து நாட்களாக அவன் மருத்துவப் பயிற்சிப்பாடங்களை எல்லாம் ஆன்லைனில் படிக்கவில்லை. போர்னோ படமாகப் பார்த்திருக்கிறான். அதனால் வந்த விளைவு தான் இது!"

"பாஸ் வேர்டு போட்டு இணையம் பதிமூன்றைப் பார்க்க முடியாமல் செய்து வைத்திருந்தேனே?"

"அதையெல்லாம் டீகோடு செய்து அவன் தகர்த்திருக்கிறான்"

"டாக்டரிம் கேட்டாயா?"

"கேட்டேன். அந்த நாதாரி, பத்துப் பையன்களில் ஒருவருக்கு இப்படியாகும் என்று கூலாகச் சொல்கிறார்?"

"என்ன தீர்வு என்று கேட்டாயா?"

"கேட்டேன். கவுன்சிலிங் செய்தால் சரியாகிவிடும் என்கிறார்?"

"கவுன்சிலிங்கா? அந்தக் கருமத்தை எங்கே போய்ச் செய்வது?'

"அவர்களிடமே அதற்கான நிபுணர்கள் உள்ளார்களாம். மூன்று மாதக் கோர்ஸாம்

ஆனால் கொஞ்சம் அதிகமாகச் செலவாகும் என்கிறார்?"

"அய்யோ, இனியும் செலவு என்றால் தாங்காதே!"

"வேறு வழியில்லை. செய்துதான் ஆகவேண்டும்!"

"எவ்வளவு ஆகுமாம்?"

சலனமின்றி அவள் பதில் சொன்னாள்.

"இரண்டு கோடிகள் ஆகுமாம்!"

தடாலென்ற சத்ததுடன் சரவணன் இன்ஸ்டண்ட்டாக மயங்கி விழுந்தான்.

எப்போது எழுந்தான் என்பது பற்றிய தகவல் இல்லை!
-------------------------
சம அறிவுத் திட்டம்! அறிவியல் போட்டிக்கான சிறுகதை இது! 18.7.2008 அன்று எழுதி என்னுடைய பல்சுவைப் பதிவில் பதிந்த கதை. அதை நீங்கள் அறிந்து கொள்ள இன்று வலையில் ஏற்றியுள்ளேன்

========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

ஸ்ரீராம். said...

விஞானக்கதை வித்தியாசமாக, சிறப்பாக இருக்கிறது. ரசித்துப் படித்தேன்.

V.C.Arunchand said...

நல்ல கற்பணை திறன் உங்களுக்கு. படிக்க நன்றாக இருந்தது...

வேப்பிலை said...

சரவணன்
ஸ்டெல்லா

கலப்பு திருமணமா..?
கலக்கல் திருமணமா..?

இந்த கதையில்
இவர்கள் இன்னமும் அப்படியா

அதற்கு ஏற்பாடு செய்ய
அவர்கள் வேண்டுமா?

அந்த கர்மங்களே
அவர்கள் விருப்பபடி கிடைக்குமே

அப்போதும் காசு கொடுத்து
அந்த பிள்ளைகளை படிக்க

வைக்கமாட்டார்கள்..
வைகையில் வரும் நீர் போல

படிக்காமலே அவர்கள்
பட்டதாரிகளாகிவிடுவார்கள்..

hamaragana said...

அன்புடன் வணக்கம் ..
அம்மாடியோவ் நல்ல வேளை அந்த வருங்காலத்தில் நான் இருக்க மாட்டேன்.. நம்மளால தாங்க முடியாது...!!!!????

kmr.krishnan said...

இப்படிப்பட்ட காலம் எதிர்காலத்தில் வரலாம்.
அன்று 'கோவிந்தராஜ பெருமாள்' என்ற பெயரெல்லாம் இருக்குமா?
எல்லோருக்குமே டிஜிடல் கோட் அல்லது எண் இருக்கும். அதனால்தான் ஒவ்வொருவரும் அறியப்படுவார்கள். அதற்கான முயற்சிக்குப் பிள்ளையார் சுழிதான் ஆதார் அட்டை, தமிழகத்தில் கொடுக்கப் போகும் ஸ்மார்ட் கார்ட் ஆகியவை

கதை நல்ல கற்பனை.

Subbiah Veerappan said...

////Blogger ஸ்ரீராம். said...
விஞ்ஞானக்கதை வித்தியாசமாக, சிறப்பாக இருக்கிறது. ரசித்துப் படித்தேன்.///

நல்லது நன்றி ஸ்ரீராம்!

Subbiah Veerappan said...

///Blogger V.C.Arunchand said...
நல்ல கற்பணை திறன் உங்களுக்கு. படிக்க நன்றாக இருந்தது...////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே! பாராட்டுக்கள் என்பது ஊக்க மருந்து - டானிக்!

Subbiah Veerappan said...

///Blogger வேப்பிலை said...
சரவணன்
ஸ்டெல்லா
கலப்பு திருமணமா..?
கலக்கல் திருமணமா..?
இந்த கதையில்
இவர்கள் இன்னமும் அப்படியா
அதற்கு ஏற்பாடு செய்ய
அவர்கள் வேண்டுமா?
அந்த கர்மங்களே
அவர்கள் விருப்பபடி கிடைக்குமே
அப்போதும் காசு கொடுத்து
அந்த பிள்ளைகளை படிக்க
வைக்கமாட்டார்கள்..
வைகையில் வரும் நீர் போல
படிக்காமலே அவர்கள்
பட்டதாரிகளாகிவிடுவார்கள்..////

நல்லது. நன்றி வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

////Blogger hamaragana said...
அன்புடன் வணக்கம் ..
அம்மாடியோவ் நல்ல வேளை அந்த வருங்காலத்தில் நான் இருக்க மாட்டேன்.. நம்மளால தாங்க முடியாது...!!!!????////

ஏன் மறுபிறப்பில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா கணபதி சார்?

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
இப்படிப்பட்ட காலம் எதிர்காலத்தில் வரலாம்.
அன்று 'கோவிந்தராஜ பெருமாள்' என்ற பெயரெல்லாம் இருக்குமா?
எல்லோருக்குமே டிஜிடல் கோட் அல்லது எண் இருக்கும். அதனால்தான் ஒவ்வொருவரும் அறியப்படுவார்கள். அதற்கான முயற்சிக்குப் பிள்ளையார் சுழிதான் ஆதார் அட்டை, தமிழகத்தில் கொடுக்கப் போகும் ஸ்மார்ட் கார்ட் ஆகியவை
கதை நல்ல கற்பனை.//////

சொல்லமுடியாது. பெயருக்கும் டிஜிடல் கோட் வரலாம். குழந்தை பிறந்த அன்றே மருத்துவமனைக்காரர்கள் அதற்குரிய இணைய தளத்தின் மூலம் அதைப் பதிவு செய்து வழங்கிவிடுவார்கள். நீங்கள் நினைப்பது சரிதான் கிருஷ்ணன் சார்!

Jeevalingam Kasirajalingam said...

சிறந்த பதிவு

Uma said...

கதை படிக்க சுவாரசியமாக இருந்தது.

கலாகுமரன் said...

நானோ டெக்னாலஜி படுத்தும் பாடு ...சுவாரசியமாக எதிர் காலத்தை சொல்லி செல்கிறது.

Dinagaraj g.b said...

Ungalin karpanai muttrilum unmaye! Idhu kandipaka nadakum !!!
Nam velai iraivanidam meendum pirava nilai adaiya prathanai seivathuthan!
intha karumathai parka koodathu endral !